Monday, April 03, 2017

தினம் ஒரு பாசுரம் - 81

தினம் ஒரு பாசுரம் - 81

இன்று திருவாதிரையை முன்னிட்டு ஒரு ராமானுஜ நூற்றந்தாதிப் பாசுரம், உங்களுக்காகவே!!!!

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்

புயலே எனக் கவி போற்றிச்செய்யேன், பொன்னரங்கம் என்னில்

மயலே பெருகும் இராமனுசன் மன்னு மாமலர்த் தாள்

அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே?


- ராமானுஜ நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)






பாசுரப் பொருள்:

ஒரு தெய்வம் - மற்றொரு தெய்வத்தை
நயவேன் - விரும்ப மாட்டேன் (பின் செல்ல மாட்டேன்)   
நானிலத்தே - (நால் வகை நிலங்கள் கொண்ட) இந்த பூவுலகில்
சில மானிடத்தைப் - சில மனிதர்களை
புயலே எனக் - (நீ அருளாளன், வள்ளல், மாவீரன்,,, என்றெல்லாம்) அதீதமாகக் கூறி
கவி போற்றிச் செய்யேன் - (அவர்களை) கவிகள் புனைந்து பாராட்ட மாட்டேன்!
பொன்னரங்கம் என்னில் - செம்பொன்னுக்கு நிகரான ”திருவரங்கம்” என்ற பேரைக் கேட்ட மாத்திரத்தில்
மயலே பெருகும் இராமானுசன் - அளவில்லா உவகை கொள்கின்ற எம்பெருமானாரின்
மன்னு மாமலர்த் தாள் - பொருந்திய, உன்னதமான, திருவடித் தாமரைகளை
அயரேன் - (ஒரு கணமும்) மறக்க மாட்டேன்
அருவினை என்னை - கொடிய பாவங்களும் துன்பங்களும் என்னை
எவ்வாறு இன்று - இன்று முதல் எவ்வகையில்
அடர்ப்பதுவே? - சூழ்ந்து நெருக்க (வருத்த/கெடுக்க) இயலும்? (”இயலவே இயலாது” என்று கொள்ள வேண்டும்)

பாசுரக்குறிப்புகள்:

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே --- அமுதனார், நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி அருளியது (”தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி! பாவின் இன்னிசை பாடித் திரிவனே”) போலவே, மிகத் தெளிவாக, உறுதியாக “இராமனுஜர் ஒருவரே என் இறைவன், அவர் திருவடிகளே எனக்குக் காப்பு” என்று அருளுகிறார்.... ஒரு வைணவ அடியாருக்கு ”உய்ய ஒரே வழி உடையவர் திருவடி” என்பது பாசுரம் தரும் ஒரு செய்தி!

நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நால்வகைப் பட்ட நிலங்கள்

சில மானிடத்தைப் புயலே எனக் கவி போற்றி செய்யேன் - எனக்கு வேறு தெய்வம் இல்லை என்று சொல்லியாகி விட்டது! பின், பூவுலகில் எந்த மனிதரையும் போற்றிப் பாட மாட்டேன் என்று சொல்லவேண்டிய அவசியம் அமுதனாருக்கு ஏன் ஏற்பட்டது? அதாவது, பொருளுக்கு ஆசைப்பட்டு, சிற்றின்ப சுகங்களுக்கு மயங்கி, வலிமையானவனின் மிரட்டல், கட்டாயத்துக்கு அஞ்சி, எந்தவொரு மானிடனையும் புகழ மாட்டேன் என்று பாசுரத்தின் முதல் வரிச் செய்தி இரண்டாம் வரியில் அழுத்தம் பெறுகிறது!

பொன்னரங்கம் என்னில் - பொன்னைப் பிடிக்காதவர் யாராவாது இருக்க முடியுமா :-) பன்னிரு ஆழ்வார்கள் பாசுரங்களில் #பொன் என்ற சொல்லை பல இடங்களில் காணலாம்.

“நம்பியை தென்குறுங்குடி நின்ற அச் செம்பொன்னே திகழும் திருமூர்த்தியை” (திருவாய்மொழி)

பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான்” (திரு நெடுந்தாண்டகம்)


”என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்

என் இவைதான் வாளா?” (பெரிய திருமடல்)

”பிறவி கெடுத்தாளும் மணி நின்ற சோதி மதுசூதன் என்னம்மான் அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே” (திருவாய்மொழி)


பொன்னுலகம் என்றால், இமையவர் உலகம் (வானுலகம்) என்ற பொருளும் உண்டு.

இங்கு பொன்னரங்கம் என்பதை, பொன் வேய்ந்த கூரை, மதிள் கொண்ட அரங்கனின் கோயில் என்று கொள்ளலாம். அப்பரந்தாமன் பள்ளி கொண்ட காரணத்தால், திருவரங்கம் என்ற அப்புண்ணியத் தலமே, பொன் போல் ஒளிர்கிறது என்றும் கொள்ளல் தகும்! பொன் என்றாலே ஒளி, ஆக, அப்பரமன் சோதி வடிவான பரம்பொருள்!      

இராமானுஜரில் திருவடிகளில் சரண் புகும் மேன்மையை, அதனால் அடியவரின் உய்வுக்கான உபாயத்தை அருளும் பாசுரத்தில், 108 வைணவத் திருப்பதிகளில் முதலாவதாகப் போற்றப்படும் திருவரங்கத்தையும் அமுதனார் குறிப்பிட்டிருப்பதை கவனிக்கவும். நன்றி.

---எ.அ.பாலா

0 மறுமொழிகள்:

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails